Friday, 18 July 2025

ஆன்மீகப் பயண அனுபவம்-முகவுரை.

 குருவே சரணம்.*

ஓம் சாந்தி**

கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.***


*ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிக்கும் முன் மானசீகமாக குருவை வணங்குதல்,சரணடைதல். காரியம் வெற்றியடைய.

**தொடங்கிய காரியம் தடையின்றி முடிவடைய இறைவனிடம் பிரார்த்தித்தல். மூன்று முறை கூறப்பட வேண்டும்.முதல் முறை காரியத்தில் ஈடுபடும் நபருக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களால் - உடல் ரீதி மற்றும் மனரீதியாக காரியத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக.இரண்டாவது முறை அவருடன் சம்பந்தப்பட்டவர்களால் ஏற்படக்கூடிய தடைகளுக்காக. மூன்றாவது முறை இயற்கை பாதிப்புக்களால் தடை ஏற்படாமல் இருப்பதற்காக.


*** உலகத்தின் முழுமுதற் கடவுளான கிருஷ்ணனுக்கு எனது நமஸ்காரங்கள். 

(இது அவரவர்களின் இஷ்ட தெய்வத்தின் அருளைப் பெறுவதற்கான இறை துதி.)


  என்னுடைய இந்த முயற்சிக்கு சூத்திரதாரி என் அத்தான் - மாமா மகன் திரு. உமாபதி அவர்கள். என்னுடைய ஆன்மீகப் பயணம் பற்றிய செய்திகள், அனுபவம், அப்படிப்பட்ட பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கும் அல்லது பயணம் மேற்கொள்ள முடியாதவர்களுக்கு நான் சென்ற இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள, அந்த அனுபவங்களை மானசீகமாக உணர, ரசிக்க ஒரு வாய்ப்பாக இருக்கலாம் என்ற ஒரு யோசனை அடிக்கடி என்னிடம் கூறி வருவார். அடிக்கடி கூறவே அந்த யோசனை என்னை சிந்திக்க வைத்தது. என்னுடைய அனுபவங்களை நான்   பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு முறையும் இந்தக் கருத்து என் அத்தான் இடம் இருந்து வந்து கொண்டேயிருக்கும். அப்படி ஒரு உரையாடல் சமீபமாக நடைபெற்ற பொழுது மீண்டும் அதே கருத்து என்னை யோசிக்கச் செய்தது.ஏன் எழுதக்கூடாது? மற்றவர்களுக்கு பயன்படுவது என்பது வேறு விஷயம். அந்த நினைவுகளை மீண்டும் ஒரு முறை தூசி தட்டி என் எண்ணத்தில் எழுப்புவது எனக்கு மட்டுமின்றி என்னுடன் கூடவே பயணித்தவர்களுக்கும் அந்த நினைவுகள் உள்ளக் கிளர்ச்சி மற்றும் சுகமான போற்றி பாதுகாக்கப்பட்ட நினைவுகளை  ஏற்படுத்துவது என்பது மட்டும் நிச்சயம். முதலில் சுயநலம்! பின் பொது நலம்!! என்ற அடிப்படையில் என்னுடைய ஆன்மீகப் பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சிதான் இந்தக் கட்டுரை. நிச்சயம் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படுத்தாது. ஏனெனில் இந்த பாரதப்புண்ணிய பூமியின் மிகச்சிறந்த இடங்கள், திருக்கோயில்கள் மற்றும் புண்ணிய ஷேத்திரங்களில்தான் உள்ளன. ஆச்சரியம் இல்லையே. அப்படித்தானே இருக்க வேண்டும். திருக்கோயில்களை நிர்மாணித்த அரசர்கள்,பிரபுக்கள் இந்த அண்ட சராசரத்திற்கும் அதிபதியான அந்த இறைவனுக்கு மிகச்சிறந்த இடங்களிலேயே, மிகச்‌சிறந்த கலைஞர்களைக் கொண்டு கோயில் எழுப்பியுள்ளார்கள்.இறைவன் அனுக்கிரகத்துடன் அவன் விருப்பப்படி இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கின்றேன்.இதனை முடிப்பதும் முடிக்காததும் அவன் கையில். இந்தத்தொடருக்கு ஒரு  உந்து சக்தியை எனக்குக் கொடுத்த என் அத்தான் திரு.உமாபதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

 எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரு தொடக்கம், ஒரு உந்து சக்தி - அந்த விஷயம் பற்றிய அறிவு, தெளிதல் அவசியம். என்னுடைய இந்த ஆன்மீகப் பயண முயற்சிக்கு இணைய வளைய தளம் மிகப்பெரிய பலம். நான் செல்ல விரும்பிய இடம் பற்றிய தகவல்கள் சேகரிக்க, பயணத்தைத் திட்ட மிட இன்டர்நெட் மிகப் பெரிய உதவியாக இருந்தது.

  என்னுடைய ஆன்மீகப் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு - திடீரென்று ஒரு பொங்கல் விடுமுறையில் ஆந்திர மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என்ற என்னுடைய ஆவல். ஆந்திராவில் திருப்பதியைத் தாண்டியதில்லை. எங்கு செல்லலாம்?  என்ற கேள்வி எழுந்த பொழுது எதேச்சையாக ஆந்திர மாநில சுற்றுலா இணைய தளத்தில் என் தேடுதல் ஆரம்பமானது. அந்த சுற்றுலா இணைய தளத்தில் “மினி டூரிஸ்ட் சர்க்கிள்” என்று தலைப்பின் கீழ் அஹோபிலம், மஹாநந்தி, ஸ்ரீசைலம், மந்த்ராலயம் என்று நான்கு இடங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த நான்கு இடங்களின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய என் தேடலில் மூன்று  வார்த்தைகளை நான் முதன் முதலில் தெரிந்து கொண்டேன்- ஜோதிர்லிங்கம்,  சக்தி பீடம் மற்றும் திவ்யதேசம். ஜோதிர் லிங்கம், சக்தி பீடம் ,திவ்யதேசம் பற்றிய என் தேடலில் மொத்தம்

 11 ஜோதிர் லிங்கங்களும்(சிவன் ஸ்தலங்கள்) 

51 சக்தி பீடங்களும் (அம்பாள் ஸ்தலங்கள்)

107+1=108 திவ்ய தேசங்களும் (விஷ்ணு ஸ்தலங்கல் - 107 பூவுலகில், 108 ஆவது அந்தப் பரந்தாமனின் இருப்பிடமான ஸ்ரீவைகுந்தம்)  உள்ளன.  அடுத்து அவை இருக்கும் இடங்கள் எவை எவை என்ற தேடல் - இந்தியா, நேபால், பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஸ்ரீலங்கா, பூடான், திபெத் (பரத கண்டம்) ஆகிய இடங்களில் . 51 சக்தி பீடங்கள் சற்றே கஷ்டம். 107 திவ்யதேசங்கள் அதை விடக் கஷ்டம். ஆனால் 11 ஜோதிர் லிங்கங்கள்? சாத்தியக் கூறுகள் அதிகம். எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசனம் செய்வோம் என்ற முடிவுக்கு வந்தேன். இந்த முடிவிற்கு முக்கிய காரணம் அந்த வயதில் எனக்கிருந்த வயது முதிர்ச்சி. சின்ன வயது. சுலபமானதை முயற்சிப்போமே என்ற எண்ணம்.

என்னுடைய முதல் ஆன்மீகப் பயணம் ஆந்திராவில் தொடங்கியது. எனது குடும்பம்- 4 நபர்கள், என் அண்ணன் திரு.பழனியப்பன் குடும்பம் -3 நபர்கள்,மற்றும் எனது அம்மா. சென்னையில் இருந்து தொடங்கி சென்னையில் முடிந்தது. 4. நாட்கள் . எனது அம்மாவிற்கு மிகவும் பிடித்தமானது. இரு குடும்பங்களும் சுமார் 4 நாட்கள், அம்மாவுடன் டெம்ப்போ டிராவலர் வேனில். இரண்டு மகன்கள், இரண்டு மருமகள்கள், 3 பேரக்குழந்தைகள், அனைவரும் 4 நாட்கள் ஒன்றாக, 24 மணிநேரமும் அவர்களின்(அம்மாவின்) அருகில், கண்பார்வையில்.எந்தத் தாய்க்குத்தான்  ஆசையிருக்காது? அடிக்கடி இந்தப் பயணத்தை  நினவு கூர்ந்து கொண்டே இருப்பார்கள். அதற்குப் பிறகு நாங்கள் அது போன்ற ஒரு பிரயாணம் மேற்கொள்ளவில்லை. அம்மா உடல் நிலை காரணமாக அடுத்த சுற்றுலாவிற்கு வர முடியவில்லை. இரண்டாவது சுற்றுலாவிற்கு எங்களது இரு குடும்பங்கள் மட்டும். அதற்க்குப் பின் சென்ற  சுற்றுலாக்களில் நேரம் ஒத்து வராமையால் எங்கள் குடும்பம் மட்டுமோ அல்லது எங்களிலேயே நானும் என் மனைவி மட்டுமோ சென்று வர வேண்டிய சூழ்நிலை. வாய்ப்பு கிட்டும் பொழுது பிரயாணத்தை முடித்து விட வேண்டும். மற்றவர்களுக்காக காத்திருப்பது, கூட்டாக சேர்ந்து போனால்தான் நன்றாக இருக்கும் என்று மற்றவர்களுக்காக தாமதித்தால், தள்ளிப் போட்டால் இந்த கால கட்டத்தில் அந்தப் பிரயாணம் பின் கை கூடுவது கேள்விக்குறியே. 


ஏன் ஜோதிர்லிங்க ஸ்தலங்களை தேர்வு செய்தேன்?


இயற்கையாகவே எனக்கு சிவன் மேல் ஈடுபாடு அதிகம். ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் இறைவன் ஒளி வடிவமாக இருப்பதாக ஐதீகம். தரிசிப்பதால் பாப விமோசனம். ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒருவர் லிங்க வடிவத்தை ஸ்பரிசிக்கலாம். தொட அனுமதி உண்டு (ராமேஸ்வரம் இதற்கு விதிவிலக்கு. 11 ஜோதிர்லிங்கங்களில் நான் ஸ்பரிசிக்காத ஜோதிர்லிங்கங்கள் ராமேஸ்வரம் மற்றும் பீமா சங்கர். இன்றைய கால கட்டத்தில் ஸ்பரிசிக்க முடியாத ஜோதிர்லிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். இப்பொழுது அதிகக் கூட்டம் காரணமாக காசி விஸ்வநாதரைத் தொட அனுமதிப்பதில்லை.) தென்னிந்தியர்களுக்கு மூலவர்களை தொட்டு பார்ப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத  அனுபவம். அந்த அனுபவம் கிடைக்கின்றது என்றால் அதற்கான கூடுதல் முயற்சி செய்வதில் யோசனையே கூடாது என்று முடிவு செய்தேன். அடுத்த  காரணம் நான் ஏற்கனவே கூறியிருந்த படி 11 ஜோதிர் லிங்கங்கள் என்ற எண்ணிக்கை. இனி பயணத்திற்குப் செல்வோமா?


இந்தப் பயண அனுபவங்களை கீழ்வரும் முறையில் பிரித்துள்ளேன்.

ஒரு  பிரயாணத்தின் பொழுது சென்ற இடங்கள் அனைத்தையும் ஒரு அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது என்றும், அந்தப் பிரயாணத்தில் சென்ற இடங்களை அத்தியாயம் என்ற தலைப்பின் கீழ் வரிசைப் படுத்துவது என்று தீர்மானித்தேன். முதல் பிரயாணத்தில் நான்கு ஊர்கள் சென்று வந்தேன். அந்த அனுபவத்தை அதிகாரம் 1 என்றும்  4 ஊர்களை 4 அத்தியாயங்களாகவும் பிரித்துள்ளேன். அதே போல் இரண்டாவது பிரயாணத்தை அதிகாரம் 2 எனவும் அதில் இரு ஊர்களைக் குறிக்கும் வகையில் 2 அத்தியாயங்கள் உடையதாக இருக்கும்.

இனி வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம்…



தொடங்கியது:24/09/23                   முடித்தது:01/10/23                   இறுதி வடிவம் :06/10/23.


எல்லாப் புகழும் இறைவனுக்கே !!!.

Dr B.ராஜகணேசன்.MBBS,Dip.Diab,

சேலம். இந்தியா.

(தொடரில் பகிர்ந்து கொள்ளப் படும் மருத்துவ சம்பந்த செய்திகளின் நம்பகத் தன்மைக்காக பெயர் மற்றும் தகுதி குறிப்பிடப்பட்டுள்ளது .)


(இந்தத் தொடர் பல்வேறு காலகட்டங்களில் நான் மேற்கொண்ட என் ஆன்மீகப் பயணத்தின் அனுபவங்கள் மற்றும் அது குறித்த என் நினைவாற்றல், இந்த இடைப்பட்ட காலத்தில் நான் படித்த புனித நூல்களைப் பற்றி என் புரிதல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.இந்த முயற்சியில் தவறுகள்,பிழை இருந்தால் அவை முற்றிலும் என் அறியாமையின் காரணமேயன்றி வேறு காரணமல்ல.அப்படிப்பட்ட பிழைகள், தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அவற்றை  திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதுடன் தவறுகள் தகுந்த முறையில் திருத்தம் செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கின்றேன்)


பிரயாணம் மேற்கொள்ளும் பொழுது அவசர தேவைக்கான மருந்துகள் எப்பொழுதும் கைவசம் இருப்பது அவசியம். நமது நாட்டில் உணவுப் பொருட்களின் சுத்தம் ஒரு பெரும் கேள்விக்குறி. உணவு மற்றும்  நீர் மூலம் பரவும் நோய்கள் - water borne diseases - வயிற்றுப் போக்கு, வாந்திபேதி மற்றும் மஞ்சள்காமாலை நோய்கள் - மிக முக்கியம் . அதற்கான தற்காப்பு நடவடிக்கையாக கொதிக்க வைத்து ஆறிய சுடுநீரை எடுத்துக் கொள்வதுடன் CIPLOX - TZ (உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து மருந்து உங்களுக்கு ஏற்றது எனும் பட்சத்தில்  எடுத்துக்கொள்ளவும்.) என்ற மாத்திரை தினமும் ஒன்று எடுத்துக் கொள்வது இந்த சங்கடங்களிலிருந்து ஓரளவு பாது காப்பு அளிக்கும்.






 


ஆன்மீகப் பயண அனுபவம்-முகவுரை.

  குருவே சரணம்.* ஓம் சாந்தி** கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.*** * ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிக்கும் முன் மானசீகமாக குருவை வணங்குதல்,சரணடைதல். கார...